காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சீரான குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
.
.
Published on

மேட்டூர்:

ஓமலூர் முதல் மேச்சேரி வரை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மேச்சேரி அருகே ஓலைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சீலாகரடு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து விட்டதாக தெரிகிறது. 

இதையொட்டி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிலந்தி நகர், சீலாகரடு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை ஓமலூர் மேச்சேரி சாலையில் வாழதாசம்பட்டி பிரிவு பகுதியில் திரண்டனர்.

பின்னர் குழாயை சரி செய்து சீரான குடிநீர் வழங்ககோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்ற மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், ஓலைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சரவணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் குழாய் சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com