சேலத்தில் எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்வு

சேலத்தில் எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்வு: 1 பழம் ரூ. 15-க்கு விற்பனை செய்யப்பட்டது.
.
.
Published on

அன்னதானப்பட்டி:

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எலுமிச்சை மரங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த மாநிலங்களில் விளைவிக்கப்படும்  எலுமிச்சை பழங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  இந்த நிலையில்  சேலம் மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அவ்வப்போது வெப்பச் சலனம் காரணமாக மழையும் பெய்து வருகிறது.

இதன் காரணமாக வெளியே சென்று விட்டு வீட்டுக்கு  வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க  கம்மங்கூழ், தர்பூசணி, இளநீர், லெமன் ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான ஜூஸ் வகைகளை வாங்கி பொதுமக்கள் குடித்து  தங்களது தாகம் தணித்து வருகின்றனர். இதனால் பழக்கடை, ஜூஸ் கடைகளில் தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தற்போது கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. விளைச்சல் பாதிப்பு, கோடைகால வெயில் தேவை அதிகரிப்பால் எலுமிச்சம் பழத்தின் விலையும் அதிகரித்துள்ளது.  கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ரூ.5 - க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெரிய அளவு எலுமிச்சம் பழம் தற்போது 3 மடங்கு விலை அதிகரித்து ரூ.15- க்கும்,  ரூ.3- க்கு விற்ற பழம் ரூ.10-க்கும், ரூ.2 - க்கு விற்ற பழம் ரூ.8  -க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எலுமிச்சம் பழம் விலை   கிடுகிடு விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com