

சேலம்:
சேலம் விமான நிலைய ஆலோசனைக் குழுவின் 3-வது கூட்டம் சிவராஜ் ஒட்டலில் குழுவின் தலைவர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் சேலத்தில் இருந்து இரவு நேர விமான சேவை தொடங்குதற்கும் அதற்கான பூர்வாங்க பணிகளை உடனடியாக தொடங்குவதற்கும் இந்திய விமானப் போக்குவரத்துத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சேலம் விமான நிலை யத்தில் கூடுதலாக விமானங்கள் நிற்பதற்கு ‘பார்கிங் வே’ ஏற்படுத்த கடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் இந்திய விமான போக்குவரத்து துறை 6.5 கோடி மதிப்பீட்டில் திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தப்புள்ளி போடப்பட்டுள்ளது.
இதற்காக இந்தியா விமான போக்குவரத்து துறை மற்றும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சேலம்- சென்னை விமான சேவையை உடனடியாக மீண்டும் தொடங்குவதற்கு எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்ததின் பெயரில் மத்திய அரசு அடுத்த வாரத்தில் இருந்து சேலம்-சென்னை விமான போக்குவரத்தை தொடங்கும் என்று அறிவித்து உள்ளது.
சேலம் விமான நிலையத்திலிருந்து இரவு நேர விமான சேவை தூங்குவதற்கு முன்பு விமான பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு மாலை நேர விமான சேவை சென்னைக்கு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், தொழிற்சாலை சேர்ந்தவர்களின் பயன்பாட்டிற்கும் இது போன்ற பலதரப்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இதை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சேலம் விமான நிலைய இயக்குனர் ரவீந்திர சர்மா, மேட்டூர் சப்-கலெக்டர் வீர்பிரதாப்சிங், இன்ஸ்பெக்டர் குமார், தொழிலதிபர்கள் அழகரசன், பாபு, இம்மானுவேல், சுரேஷ், ஹரிபாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.