எடப்பாடி அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தை சேர்ந்த பெண் தனது 2 குழந்தைகளுடன் மாயமாகிவிட்டார்.
மாயமான ஜீவிதா மற்றும் குழந்தைகள்.
மாயமான ஜீவிதா மற்றும் குழந்தைகள்.
Published on

எடப்பாடி:

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகிலுள்ள காவடிகாரனூர் கிராமம், குஞ்சான் காடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். 

ரிக் வண்டி உரிமையாளரான இவரது மனைவி ஜீவிதா(வயது 30). இவர்களுக்கு ஷாசினி(9) மற்றும் சர்வின்(6) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தினேஷ் குமார் பணி நிமித்தமாக மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுவிட்டார்.  

நேற்று தனது குழந்தைகளுக்கு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அதில் கலந்துகொள்ள தனது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற ஜீவிதா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் ஜீவிதாவின் குழந்தைகள் படிக்கும் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜீவிதாவை தேடினர்.  இந்நிலையில் அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் கொங்கணாபுரம் அருகிலுள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் நிற்பதை கண்ட அவரது குடும்பத்தினர் அங்கு சென்று விசாரித்தனர். 

அப்போது ஜீவிதா இருசக்கர வாகன சாவியை பேக்கரி கடையில் கொடுத்து தனது குடும்பத்தினர் வந்து சாவியை பெற்றுக் கொள்வார்கள் என கூறி சென்றது  தெரியவந்தது.

இதனையடுத்து கொங்கணா புரம் போலீஸ் நிலையத்தில் ஜீவிதாவின் உறவினர்கள் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீ சார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஜீவிதா குழந்தைகளை அழைத்துக்கொண்டு சேலம் செல்லும் பேருந்தில் ஏறி சென்றக் காட்சி பதிவாகி இருந்தது. 

இதனை அடுத்து குழந்தைகளுடன் மாயமான பெண் குறித்து போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அவரது செல்போன் சிக்னல் எங்கு உள்ளது என்று ஆய்வு செய்து வருகின்றனர். 2 குழந்தைகளுடன் பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com