

சேலம்:
மகப்பேறு மற்றும் சிசு மரண தணிக்கை கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தாய் மற்றும் சிசு மரணத்தை தடுக்கும் வழிமுறைகளான உரிய கர்ப்பகால சேவைகள், தாய் மற்றும் சேய் நல பராமரிப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது, சிக்கலுள்ள கர்ப்பிணிகள் மற்றும் சிசுக்களை முறையாக கண்காணிப்பது போன்றவை குறித்து இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் ரத்தசோகை போன்ற கர்ப்பகால சிக்கலுள்ள தாய்மார்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சையளிப்பது மற்றும் மூன்றாம் நிலை சிறப்பு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு உரிய காலத்தில் பரிந்துரைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
முதல் பிரசவத்திற்கு பிறகு உரிய குடும்ப நல இடை வெளியை பின்பற்றவும், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு முறைகளை எடுத்துரைத்து தாய் மற்றும் சேய் மரணங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் கார்மேகம் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) நளினி, ஜெமினி (ஆத்தூர்) மற்றும் டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டனர்.