

சேலம்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள வனவாசி பகுதியை சேர்ந்தவர் கவுதமன் (வயது 24). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதேபோல் ஜலகண்டாபுரம் அருகே உள்ள அரியாம்பட்டியை சேர்ந்தவர் அன்பரசி (20). இவரும் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் மிஸ்டு கால் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் அன்பரசிக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பரசி, கடந்த 25-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி இருவரும் பாதுகாப்பு கேட்டு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துவைத்து, அன்பரசியை கவுதமனுடன் அனுப்பி வைத்தனர்.