

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அதையும் மீறி கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் கொரோனாவை தடுக்கும் வகையில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் இன்று ஆலோசனை நடத்தினார். இனி வரும் நாட்களில் கொரோனாவை கட்டுப்படுத்த கல்லூரிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்து அவர் ஆலோசனை வழங்கினார்.
கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்கவேண்டும். வகுப்பறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.