மனைவியை ஏமாற்றி ரகசியமாக 2-வது திருமணம் செய்த கணவர்

சேலம் அருகே மனைவியை ஏமாற்றி கணவர் ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்டார். இதற்கு உடந்தையாக இருந்த நகைக்கடை அதிபர் உள்பட 3 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
.
.
Published on

சேலம்:

சேலம் பொன்னம்மாப்பேட்டை என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்சிங் (வயது 41). இவரது மனைவி மோகனபிரியா (35). இந்த தம்பதிக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ரமேஷ்சிங் சேலம் டவுனில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர், மோகனபிரியாவிடம் அடிக்கடி கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் இவர் வேலை செய்யும் இடத்தில் பணிபுரியும் சத்யா (வயது 18) என்ற பெண்ணை மோகனபிரியாவுக்கு தெரியாமல் ரகசியமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இதுபற்றி  தகவல் அறிந்த மோகனபிரியா கடும் அதிர்ச்சி அடைந்தார். தனது 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு  கணவர் 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அறிந்து மனவேதனையில் கதறி அழுதார்.

மேலும் இதுகுறித்து மோகனபிரியா சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார்.  

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ரமேஷ்சிங், வேலை பார்க்கும் ஒவியா நகைக்கடை உரிமையாளர் சண்முகராஜ்  எதற்காக போலீசில் புகார் கொடுத்தாய்? எனக்கேட்டு மோகனப்பிரியாவை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, தலைமறைவான ரமேஷ் சிங், சத்யா, நகைக்கடை அதிபர் சண்முகராஜ் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com