

பனமரத்துப்பட்டி:
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டி கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே பெடரல் பேங்க் எனப்படும் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே பணம் எடுப்பதற்காக அந்த வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.
அந்த ஏ.டி.எம். மையத்தில் காவலர்கள் இல்லாததால் நேற்று இரவு ஒரு மணியளவில் ஏ.டி.எம். மையத்தில் நுழைந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்பொழுது செக்யூரிட்டி அலாரம் அடித்ததால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்ட உடன் அந்த வங்கியின் மேலாளரின் செல்போனுக்கு செக்யூரிட்டி அலாரம் சென்றுள்ளது.
இதையடுத்து வங்கி மேலாளர் மல்லூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்துள்ளார். மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து உள்ள ஒரு இடத்தில் ஏ.டி.எம். ஐ உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.