

பனமரத்துப்பட்டி:
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே தாசநாயக்கன்பட்டியில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் வசித்து வருபவர் இந்திராணி. (வயது 70). தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவருடைய கணவர் சவுந்தரராஜன். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இந்திராணி, தன்னுடைய தங்கை சித்ரா, தம்பி சீனிவாசன் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்திராணி தன்னுடைய குடும்பத்தினருடன் பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது, வீட்டின் இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது கதவுகளும் உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இந்திராணி, வீட்டில் இருந்த நகைகளை பார்த்தார். ஆனால் 19 பவுன் நகைகளையும், ரூ.20 ஆயிரத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.