

சேலம்:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மே மாதம் பொது தேர்வு நடக்க உள்ளது. அவர்களுக்கான செய்முறை தேர்வு வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.
இந்த செய்முறை தேர்வை பதட்டமின்றி மாணவர்கள் மேற்கொள்ளும் வகையில் பள்ளி தரப்பில் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள், பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் செய்முறை தேர்வுகளை எந்த பிரச்சனையுமின்றி நடத்தும் வகையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக அரசு பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.
மாற்றுப் பணியில் உள்ள ஆய்வக உதவியாளர்களை, உரிய பணியிடங்களுக்கு மாற்றி, பொது தேர்வுக்கான செய்முறை தேர்வு ஏற்பாடுகளில் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிகிறது.