கோவையில் வீடு புகுந்து பணம் கொள்ளை

போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
கோவையில் வீடு புகுந்து பணம் கொள்ளை
Published on

கோவை

கோவை செல்வபுரம் திருநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ஞானசரஸ்வதி (வயது 65). இவர் கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

அவரது வீட்டில் சி.சி.டி.வி காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவாகும் காட்சிகளை தனது செல்போனில் பார்க்கும்படி இணைத்து வைத்திருந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு அவர் தனது செல்போன் மூலம் சி.சி.டி.வி காட்சிகளை பார்த்தார்.

அப்போது வீட்டின் மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தது. மேலும் சி.சி.டி.வி காமிரா திருப்பி வைக்கப்பட்டு இருந்தது.இதனால், சந்தேகமடைந்த அவர் இது குறித்து உடனே செல்போன் மூலம் பக்கத்து வீட்டுக்காரர்களை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

அவர்கள் சென்று பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே பக்கத்து வீட்டினர் ஞானசரஸ்வதியிடம் அதனை தெரிவித்தனர். அவர் மதுரையில் இருந்து கோவைக்கு விரைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதும், தங்களது உருவம் சி.சி.டி.வி காமிராவில் பதிவாக கூடாது என்பதற்காக அதனை திருப்பி வைத்து விட்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து ஞானசரஸ்வதி செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com