கடைகளை மூடக்கோரி 2 வியாபாரிகளுக்கு கத்தி வெட்டு

பட்டா கத்தியால் வெட்டினார் வாலிபர் கைது-பரபரப்பு
கடைகளை மூடக்கோரி 2 வியாபாரிகளுக்கு கத்தி வெட்டு
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தின் அருகே மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடையில் உள்ளன.

முருகேஷ் என்பவர் பேன்சி ஸ்டோரும், பிரசாந்த் என்பவர் பூ வியாபாரமும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மார்க்கெட்டில் திடீரென பட்டா கத்தியுடன் வாலிபர் ஒருவர் புகுந்தார்.

கடைகளை மூடக்கோரி மிரட்டி முருகேசையும், பிரசாந்திடமும் தகராறில் ஈடுபட்டார். மேலும் பட்டா கத்தியால் அவர்களை வெட்டினார். இதில் இருவரும் காயமடைந்தனர்.

இதனை தடுக்க வந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் வாலிபர்களை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது அவருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெட்டு காயமடைந்த இருவரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர். ரகளையில் ஈடுபட்ட அம்பேத்கார் நகரை சேர்ந்த பரணி (வயது 25)என்பவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

டவுன் போலீஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட்டில் வாலிபர் புகுந்து வியாபாரிகளை பட்டா கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com