

கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடல் பகுதிகள் கடுமையாக மாசடைந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கழிவு நீர் கலப்பது ஆகும். கீழக்கரை நகரில் இருந்து தினந்தோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லிட்டர் அளவில் கழிவுநீர் நேரடியாக கடலில் கலக்கிறது.
பல ஆண்டுகளாக இந்த நிலை தொடருவதால் கீழக்கரை பகுதி கடலின் நிறம் இயற்கை தன்மையிலிருந்து மாறி விட்டது. நகராட்சி நிர்வாகங்கள் மாறினாலும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.
தற்போது கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளும், கட்டிட கழிவுகளும் கொட்டப்படுகிறது. ஏற்கனவே பவள பாறைகளை வெட்டி எடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் இதுபோல் சாக்கடைநீர் சுத்தி கரிக்கப் படாமல் நேரடியாக கலப்பதால் கடலின் சுற்று சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கடல் நீர் மாசடைந்து மீன்வளம் குறைந்து வருவதாக கடல் வாழ் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
கீழக்கரை பகுதி கடலில் நாளொன்றுக்கு 2 டன்னுக்கும் மேல் மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது படிப்படியாக மீன் வளம் குறைந்து கொண்டே செல்கிறது. பாதுகாக்கபட்ட மன்னார் வளைகுடா பகுதி என்று பெயர் அளவில் மட்டுமே உள்ளது.
கடல் மாசுபாட்டை தடுக்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்காதது ஆச்சரியத்தை அளிக்கிறது என கடல்சார் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தது.
மின்சாரம் பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது. நிலக் கரி, தண்ணீர் மற்றும் காற்று மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணு உலைகளில் இருந்தும் மின்சாரம் தயாராகி வருகிறது.
கழிவுநீரின் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பம் உள்ளது. அதி நவீன தொழில் நுட்பத்தின் மூலம் கழிவு நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம். பின்னர் அது சுத்தமான நீராக மாற்றி அதை குடிநீராக பயன்படுத்த முடியும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து இது தொடர்பாக நிரந்தர தீர்வு காண கீழக்கரை தொழிலதிபர் அஹமது புஹாரி முயற்சியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ஆலோசனை சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
இது குறித்து மக்கள் டீம் காதர் கூறுகையில், கீழக்கரை நகரில் ஆண்டுக் கணக்கில் கழிவு நீர் கடலில் கலந்து வருகிறது. சில சமயம் குப்பைகள் கொட்டும் தளமாகவும் இந்தப்பகுதி கடற்கரை மாறி வருகிறது, இதற்கு நிரந்த தீர்வு கடலில் கலக்கும் சாக்கடையை சுத்திகரித்து குடிநீராகவோ, விவசாய நீராகவோ பயன் படுத்த முடியும். இது குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்றார்.