

சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திட்டங்குளம், பிள்ளையார்குளம், காணிக்கூர், எஸ்.புல்லந்தை, கீரந்தை, உசிலங்குளம், எம்.கரிசல்குளம், ஒச்சதேவன் கோட்டை, கொக்காடி, குருவாடி, உள்ளிட்ட100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வந்தனர்.பருவ காலத்தில் மழை பெய்யாததால் பயிர்கள் கருகி வருகின்றன.
வேளாண்மை துறை ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சாயல்குடி விவசாயி சம்சு கூறியதாவது:-
சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உரிய நேரத்தில் மழை இல்லாததால் நெற்பயிர்கள் வாடி விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. சாயல்குடி பெரிய கண்மாய்க்கு உட்பட்ட பகுதிகளில் நஞ்சையில் நெல் விவசாயம் அதிக அளவில் செய்தனர். கண்மாயில் மழைநீர் மட்டுமே இருந்ததால் நஞ்சை நிலங்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் தற்போது வாடிவருகின்றன.
முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் முயற்சியால் வந்த வைகை தண்ணீரால் அந்தப்பகுதியில் விளைச்சல் ஏற்பட்டுள்ளது.
சாயல்குடி கண்மாய் பகுதிகளுக்கு வரும் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததால் மணல் மேடாகி தூர்ந்து போய் உள்ளது. வரும் ஆண்டுகளிலாவது கால்வாயை தூர்வாரி சாயல்குடி உட்பட இந்தப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் வைகை நீரை கொண்டு வர நடவடிக்கை எடுத்தால் அனைத்து பகுதிகளிலும் விளைச்சல் ஏற்படும்.
குறைந்த மழை மட்டுமே பெய்த இடங்களில் நெற்பயிர்கள் முழுவதும் கருகி வருகின்றன. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் விதைப்பு முதல் களை எடுப்பு, உரமிடுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து முடித்து விட்டனர்.
தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடன்களை வாங்கி விவசாயிகள் செலவு செய்துள்ளனர். தற்போது மழை பெய்யாததால் நெற்கதிர்கள் கருகிவிட்டன. இந்தப்பகுதி விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
பயிர் காப்பீட்டு நிறுவனம் வேளாண்மை துறை புள்ளியல் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.