

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் தமிழக அரசின் புதிய வரி உயர்வு தீர்மானம் நிறைவேறியது.
21 உறுப்பினர்்்கள் கொண்ட கீழக்கரை நகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த துணைசேர்மன் உள்ளிட்ட 6,8,16-வது வார்டு உறுப்பினர்கள் 4 பேர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்ட 17 உறுப்பினர்களில் 1-வது வார்டு உறுப்பினர் பாதுஷா, 18-வது வார்டு எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் சக்கினாபேகம் ஆகியோர் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர்.
தீர்மானத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் சூர்யகலா,அ.தி.மு.க. உறுப்பினர் பவித்ரா,
2-வது வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமி, அனைத்து சமுதாய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சேக்ஹுசைன்,டல்சி ஆகியோர் தங்களின் கருத்துகளை பதிவு செய்து எதிர்ப்பை காட்டினர். மீதமுள்ள தி.மு.க.உறுப்பினர் 10 பேர் வரி உயர்வை ஆதரித்து தீர்மானத்தை நிறைவேற்றினர்.
இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் நகராட்சி வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
எஸ்.டி.பி.ஐ. நகர் தலைவர் ஹமீது பைசல், மாநில செயற்குழு உறுப்பினர் கீழை ஜஹாங்கீர் அரூஸி, விடுதலை சிறுத்தைகள் கட்சிநகர்செயலாளர் பாசித் இல்யாஸ்,வீரகுல தமிழர் படையின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஆகியோர்பேசினர். தேசிய தவ்ஹீது கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் மரூஸ் கோஷம் எழுப்பினார்.எஸ்.டி.பி.ஐ.கட்சியின் நகர் செயலாளர் அஸ்ரப் தொகுத்து வழங்கினார்.நகர் துணை செயலாளர் ஜலீல் நன்றி கூறினார்.
இதில் கீழக்கரை நகர் நல இயக்கம் பசீர்மரைக்கா, சட்ட விழிப்புணர்வு இயக்கம் தாஜுல் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.