

புதுச்சேரி:
75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி நாடு முழுவதும் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
75 ஆண்டை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் 75 நகரங்களில் 100 அடியில் கொடிக்கம்பம் அமைத்து தேசியக்கொடி பறக்கவிடப்பட உள்ளது.
புதுவையில் கடற்கரை சாலை காந்தி திடலில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு தியாகிகள் சுவருடன் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 100 அடி கொடிக்கம்பத்தில் 30 அடி நீளத்திலும், 8 அடி அகலத்திலும் தேசியக்கொடி பறக்கவிடப்படும்.
கொடிக்கம்பம் அமையும் இடத்துக்கு பின்புறம் தியாகிகள் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சுதந்திரத்துக்காக போராடிய ஆயிரம் தியாகிகளின் பெயர், விபரங்கள், கியூ. ஆர்.கோடு ஆகியவை அமைக்கப்படுகிறது. கியூ.ஆர்.கோடு மூலம் தியாகிகளின் முழு விபரங்களை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜூன் மாத இறுதியில் பிரதமர் காணொலி மூலம் டெல்லியிலிருந்து இதை திறந்து வைக்க உள்ளார்.