மது குடித்து விட்டு ரகளை செய்த 11 பேர் கைது

புதுவையில் தனித்தனி இடங்களில் மது குடித்து விட்டு ரகளை செய்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் மடுவுபேட் சந்திப்பில் 3 பேர் கொண்ட கும்பல் மது குடித்து விட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ரகளை செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்ட 3 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை நெசவாளர் நகரை சேர்ந்த செல்வராஜ், பெத்துசெட்டிபேட்டை சேர்ந்த ஆனந்தன் மற்றும் லாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரைசாலையில் சப்தகிரி மார்க்கெட் அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், அஷரப் மற்றும் லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்த வினோ ஆகிய 3 பேரையும் லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

புதுவை  மேட்டுப் பாளையம் லாரிகள் நிறுத்துமிடத்தில் உள்ள மதுக்கடை அருகே மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட வில்லியனூர் கோபாலன் கடை பகுதியை சேர்ந்த கவுதம் (26) காந்தி திருநல்லூரை சேர்ந்த மாயவன் (32) ஆகியோரை மேட்டுப்பாளையம் போலீசாரும் அதன் அருகே கோரிமேடு போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் மது போதையில் ரகளை செய்த பிச்சவீரன் பேட் கார்த்திக் (38) கிருபாநந்தம் (35) ஆகியோரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.

கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவில் பச்சை வாழியம்மன் கோவில் அருகே ஒரு வாலிபர் நடுரோட்டில் நின்று கொண்டு பொது மக்களை  ஆபாசவார்த்தைகளால் திட்டி தகராறு செய்து கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்த  கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த  கார்த்திக் (37) என்பது தெரியவந்தது இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com