

தேனி:
தேனி அல்லிநகரம் காமராஜர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் கலெக்டர் முரளிதரன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:
போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோயினை ஒழிப்பதற்கு வருடந்தோறும் 5 வயதிற் குட்பட்ட குழந்தைகளுக்கு நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2003க்கு பிறகு போலியோ நோய் எந்த குழந்தைக்கும் பாதிப்பு இல்லை. தேனி மாவட்டத்தில் கடந்த 25 வருடங்களாக எந்த குழந்தைக்கும் போலியோ நோய் தொற்று ஏற்படவில்லை.
தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் கிராம புறங்களில் 700 மையங்கள் நகர் புறங்களில் 136 மையங்கள் என மொத்தம் 836 மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 1,02,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், 480 ஊட்டச்சத்து மையங்கள் 28 பஸ் நிலையங்கள், 128 இதர இடங்களில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 1257 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, ஊட்டச்சத் துத்துறை, மகளிர் திட்டம், உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்றுள்ளனர்.
சாலை ஓரம் குடியிருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், செங்கல் சூளை, மலை பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்கள், நகராட்சி குடிசை பகுதிகள் என மொத்தம் 127 இடங்கள் கண்டறியப்பட்டு சிறப்பு குழுவின் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறுவதை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக 8 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.