

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி கமலாநேரு ஆஸ்பத்திரியில் போலியோ சொட்டுமருந்து முகாமை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,
மாவட்டத்தில் 1,313 மையங்களில் இன்று 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து ஆங்காங்கே உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள்,
பஞ்சாயத்து அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பஸ்நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் மையங்களிலும், 28 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும், 51 போக்குவரத்து முகாம்களிலும் ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டது.
இப்பணிக்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த 5,276 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத் தில் சுமார் 1,94,958 குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதற்காக 2,56,000 டோஸ் மருந்து இருப்பு உள்ளது.
பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை சொட்டுமருந்து அளித்தி ருந்தாலும், இம்முறை கூடுதல் தவணையாக போலியோ சொட்டுமருந்து வழங்கி, பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன், போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க உதவிட வேண்டும் என்றார்.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜன், நகர்நல அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.