கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

கோவிலில் மர்ம நபர்கள் பணம், நகை திருடி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
Published on

மத்தூர்:

மத்தூர் அருகே கும்பாபிஷேகம் நடந்த சில நாட்களிலேயே திரவுபதி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி, கோடிப்பதி பகுதியில் பழமை வாய்ந்த திரவுபதியம்மன் கோவில் புணரமைக்கபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து மகா பாரத சொற்பொழிவு விழாவும் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இரவு கோவிலை பூசாரி பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

மார்கழி மாதம் என்பதால் இன்று அதிகாலையிலேயே கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க தாலி, பீரோ உடைக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அக்கோவிலின் தர்மகர்த்தாவிடம் தெரிவித்தார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோவில் தர்மகர்த்தா மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கும்பாபிஷேகம் நடந்து சில நாட்களிலேயே கோவிலில் மர்ம நபர்கள் பணம், நகை திருடி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com