திண்டுக்கல் மருத்துவக்கல்லூரியில் மாணவர்களுக்கு உடல் பரிசோதனை
திண்டுக்கல்:
தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகள், 17 சுயநிதி கல்லூரிகள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரி, 15 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 6629 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வில் 6043 பேர் இடங்களை தேர்வு செய்தனர்.
அவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டது. எஸ்.சி., எஸ்.டி. ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள் காலியாக இருந்தன. அந்த இடங்களுக்கும் தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு 17ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றே வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் உள்பட அனைவரும் வருகை தந்தனர். அகில இந்திய கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள் வரவில்லை.
இதனால் இன்று கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு அவர்களின் புகைப்படத்தை வைத்து சான்றிதழ் சரிபார்க்கப் பட்டது. மேலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை நடத்தப் பட்டது. கொரோனா பரி சோதனையும் எடுக்கப் பட்டது.
திண்டுக்கல் அருகில் உள்ள ஒடுக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு தற்போது இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையும் நடந்து முடிந்துள்ளது.
இதனால் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு எந்தவித கல்விக் கட்டணமும் கிடையாது. மாணவர்கள் முழுமையான வருகைக்குப் பிறகு 17ம் தேதி முதல் பாடங்கள் நடத்தப்படும் என்று டீன் தெரிவித்தார்.

