கொடைக்கானலில் அனுமதியின்றி படப்படிப்பு நடத்தியவர்களுக்கு அபராதம்

கொடைக்கானலில் அனுமதியின்றி படப்படிப்பு நடத்திய குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்திய குழுவினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்திய குழுவினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Published on

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் இயற்கை எழில் சூழ்ந்த பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. அருவிகள், நீர்வீழ்ச்சிகள், படகு சவாரி, அடர்ந்த வனப்பகுதி, பூங்காக்கள் ஆகியவற்றை காண இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இதனால் பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஏராளமானோர் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

படப்பிடிப்பு நடத்துபவர்கள் நகராட்சி மற்றும் வனத்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களிடம் அனுமதி பெறவேண்டும். இந்நிலையில் இன்று கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.

இதனை பார்க்க பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவு கூடியதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்திற்கும், போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்திய குழுவினருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் போலீசார் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தி முறையான அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துமாறு அவர்களை அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com