

நத்தம்:
தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 7&ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மறுநாள் 8ந் தேதி உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித நீராடி கருப்பசாமி கோவிலுக்கு வந்தடைவார்கள்.
அதன்பிறகு அங்கிருந்து மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக செல்வார்கள். அங்கு அம்மனை வழிபட்டு காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். அன்றைய தினம் இரவு அம்மன் குளத்தில் இருந்து நகர்வலமாக கம்பம் எடுத்து வரப்பட்டு கோவிலில் நடப்படும். இதனைத் தொடர்ந்து அம்மன் மயில், சிம்மம், அன்னம் உள்ளிட்ட வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா மார்ச் 22ந் தேதி நடக்கிறது. அன்று காலை முதல் மதியம் வரை அம்மனுக்கு பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தும் பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி எடுத்து வந்தும் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். அதன்பிறகு கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெறும்.
கம்பத்தின் உச்சியில் ஊன்றப்பட்ட வேப்பி லையை எடுத்த பிறகு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். 23ந் தேதி காலை 9 மணிக்கு மஞசள் நீராட்டு விழா மற்றும் இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறும்.