

ராசிபுரம்:
கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க. தேர்தல் வாக்கு றுதியில் கூறியிருந்தது.
அதன்படி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் 5 சவரன் நகை கடன் பெற்றவர்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டு நகைகளை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் அது போன்ற பணிகள் பல்வேறு சங்கங்களில் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் வெண்ணந்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அத்தனூர் ஆயி பாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 சவரன் நகை கடன் பெற்றவர் களுக்கு இதுவரை நகைகளை திருப்பி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
மற்ற கூட்டுறவு சங்கங்களில் நகைகளை திருப்பி ஒப்படைப்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டும், நகைகளை ஒப்படைக்கப்படும் வரும் சூழ்நிலையில் அ.ஆயிபாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தில் மட்டும் 5 சவரன் நகைகடன் பெற்றவர்களுக்கு நகைகளை திருப்பி வழங்காமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து அந்தப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இன்று காலையில் சங்கத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வெண்ணந்தூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரண்டொரு நாட்களில் நகைகள் திருப்பி வழங்கப்படும் என்று சங்கத்தின் சார்பில் அறிவித்தனர். இதனால் பெண்கள் அவர்களது போராட்டத்தை கைவிட்டனர்.