

நாமக்கல்:
கிராமப்புறங்களில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேர்வு நேற்று நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் நாமக்கல் கல்வி மாவட்டத்தில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 6 மையங்களிலும், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலகவுண்டம்பட்டி அரசு பள்ளி உள்பட 7 மையங்களிலும் என மொத்தம் 13 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வை எழுத மாவட்டம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 2 ஆயிரத்து 29 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வை எழுதினர். மீதமுள்ள 66 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இந்த தேர்வை மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமன், விஜயா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த தேர்வில் வெற்றி பெறும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள் என 100 பேருக்கு பிளஸ்-2 வரை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.