

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி அருகில் உள்ள ரெட்டையாம்பட்டியில் சுயம்பு மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த 4ம் தேதி, காப்புகட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிசேகம் செய்தனர்.
தினசரி சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வாக, கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவை முன்னிட்டு பொங்கல் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.