வட்டார அளவிலான சுகாதார விழா

பரமத்தியில் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் வட்டார அளவிலான சுகாதார விழா நடந்தது.
.
.
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் வட்டார அளவிலான சுகாதார  விழாவின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி தலைமை வகித்தார்.

துணைத்தலைவர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணி வண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கே.எஸ்.மூர்த்தி கலந்துகொண்டு சுகாதார திருவிழாவை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பரமத்தி அட்மா தலைவர் தன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முகாமில் கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம்,சித்த மருத்துவப் பிரிவு சார்பாக மகப்பேறு சஞ்சீவி பெட்டகம், பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

2 பெண் குழந்தைகள் பெற்று கருத்தடை செய்து கொண்ட தாய்மார்களுக்கு ஊக்குவிப்பு பரிசு, பள்ளி சிறார் நல திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 விழாவில் நடைபெற்ற கண்காட்சியில் பல்வேறு  துறை மற்றும்  பேரூராட்சித் துறை சார்பாக பல கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பார்வையிட்டு பயன் பெற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com