

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தனியார்துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற 4-ந்தேதி நடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டு நேரில் தேர்வு செய்து கொள்ளலாம்.
இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர் வைசர், கணக்காளர், காசாளர் தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர், 12-ம் வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ (தொழிற்பழகுநர்) பயிற்சி மற்றும் கணினியில் முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன்பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும்.இம்முகாமில் பங்கு பெறும் வேலையளிப்பாரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
இம்முகாமானது முற்றிலும் இலவசமானது. மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.