

பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணியில் உள்ள கூத்தாடி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் கூத்தாடி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
அன்று இரவு சாமி சாட்டுதல் நிகழ்ச்சியும், கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கூத்தாடி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு கோவில் வளாகத்தில் தயாராக இருந்த தீக்குண்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று இரவு பெண்கள் ஊர்வலமாக மாவிளக்கு கொண்டுவந்து கோவில் வளாகத்தில் வைத்து மாவிளக்கு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.