

நாமக்கல்:
நாமக்கல் திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 3500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இங்கு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். இளங்கலை 13 பாடப்பிரிவுகளும், முதுகலை 9 பாடப்பிரிவுகளும், பிஎச்டி 3 பாடப்பிரிவுகளும் உள்ளன.
இந்த கல்லூரி 201-19 ம் ஆண்டு பொன்விழா கண்ட பெருமைக்குரிய கல்லூரியாக உள்ளது. கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் பல்கலை கழக அளவில் மாணவிகள் கோப்பைகள் பெற்றுள்ளனர்.
இக்கல்லூரியில் பேராசிரியர்கள், கவுர விரிவுரையாளர்கள் என மொத்தம் 135 பேராசிரியர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் தற்போது 84 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
மீதம் 51 பேராசிரியர்கள் பணி இடங்கள் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. போதுமான பேராசிரியர்கள் இல்லாததால் மாணவிகளின் கல்வி கேள்விகுறியாகவே உள்ளது.
கல்லூரியில் குறைந்த ஊதியத்தில் தற்காலிகமாக தூய்மை பணியாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். காவலர்கள், சுகாதார பணியாளர்கள் இல்லை. இதனால் கல்லூரியை முழுமையாக பராமரிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.