நாமக்கல் நகராட்சியில் அரசு ஒதுகீட்டில் வீடுகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல்:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் நாமக்கல் நகராட்சி மற்றும் எருமப்பட்டி நாகராஜபுரம் பகுதிகளில் முறையே 960, 192 மற்றும் 240 என மொத்தம் 1,392 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
குடியிருப்புகளுக்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்காக தகுதியானவர் களிடமிருந்து நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
அதன்படி, நேற்று ஏராளமானோர் விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். விண்ணப்பத்துடன் குடும்பத் தலைவர், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், குடும்ப புகைப்படம் ஆகியவற்றை இணைத்து வழங்கினர்.
வீடு ஒதுக்கீடு பெறும் பயனாளிகளுக்கு அரசால் நிணயிக்கப்பட்ட தொகை நகராட்சி பகுதி எனில் திட்டப் பகுதிக்கு ஏற்ப ரூ. 1,49,000, ரூ.1,60,700 மற்றும் எருமப்பட்டி நாகராஜபுரம் திட்டப்பகுதி எனில் ரூ.1,64,075 வீதம் முன் பணமாக செலுத்தவேண்டும். காலை 10 முதல் 5 மணி வரை உரிய ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

