

குமாரபாளையம்:
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று முன்தினம் பள்ளி நேரம் முடிந்து கிழக்கு காவேரி நகர் பாறை அருகே வைத்து இருபிரிவாக மோதிக் கொண்டனர். இதுபற்றி குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நேரில் சென்று சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதையொட்டி பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்கள் பற்றி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்திய தண்டனை சட்டம், வழக்கு பிரிவுகள், யாவருக்கும் பொதுவானது. மாணவர்கள் கல்வி பயிலும் வயதில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். சமூக விரோத செயலில் ஈடுபட்டாலோ, குற்றம் செய்பவருக்கு துணையாக இருந்தாலோ தண்டனை இருவருக்கும் உண்டு.
எப்.ஐ.ஆர். எனப்படும் வழக்குபதிவு செய்து விட்டால், மாணவர்கள் உயர்கல்வி பயிலவோ, வெளிநாடு செல்லவோ, அரசு வேலை பெறவோ முடியாது.
இனியொருமுறை தகராறில் ஈடுபட்டால் நிச்சயம் சம்பந்தப்பட்ட, மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.