

திருச்செங்கோடு:
திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழா கடந்த 25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து குண்டம் இறங்கும் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் இறங்க மாலையணிந்து காப்பு கட்டிய பக்தர்கள் மலையடிகுட்டையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதனையொட்டி மலையடிகுட்டையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தின் முதன்முதலில் குண்டம் இறங்கும் பூசாரி கும்பத்தில் தீர்த்தம் எடுத்து வர குடைகள், பூஜை பொருட்கள் அடங்கிய கூடை ஆகியவையும் எடுத்து வரப்பட்டது. மலையடிகுட்டையில் இருந்து தொடங்கிய தீர்த்தக்குட ஊர்வலம் நாமக்கல் ரோடு வழியாக சின்ன ஓங்காளியம்மன் கோவிலை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து இரவு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும், குலாலர் வீட்டில் இருந்து அக்னிசட்டி அழைத்து வந்து சக்தி கரகமும் நடைபெற்றது. விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) விளக்கு பூஜை, அக்னி கரகம், அலகு குத்துதல் நடக்க உள்ளது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 108 சங்காபிஷேகம், 7-ந் தேதி பூச்சொரிதல் விழா நடக்கிறது.
8-ந் தேதி இரவு குண்டம் பற்ற வைத்தலும், 9-ந் தேதி அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. தொடர்ந்து பொங்கல் விழா நிகழ்ச்சியும் 12-ந் தேதி அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.