

நாமக்கல்:
சேலம் தாதகாப்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 34). தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி தமிழ்செல்வி (30). இவர்களுக்கு அக்ஷயா (7), பிரகதி (3) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இவர்கள் 4 பேரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் நாமக்கல் மாவட்டம் களங்காணியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்தனர். அப்போது பாச்சல் மேம்பாலத்தில் இறங்கும்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தமிழ்செல்வன் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் தமிழ் செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தமிழ்செல்வனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.
பின்னர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வனும் இறந்தார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அக்ஷயா, பிரகதி ஆகிய இருவரும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.