

ராசிபுரம்:
புதுச்சேரியில் இருந்து வைக்கோல் தீவன கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று இன்று காலை நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொப்பபட்டி ஜேடர்பாளையத்திற்கு வந்தது. லாரியை சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த ரஜினி கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார்.
வைக்கோல் தீவன கட்டுகளை ஏற்றி வந்த லாரியின் மீது மின் கம்பி உரசியதால் திடீரென்று வைக்கோல் கட்டுகளில் தீப்பற்றிக் கொண்டது.
இதைக்கண்ட லாரி டிரைவரும், அங்கிருந்த இளைஞர்களும் லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகளை கீழே தள்ளிவிட்டனர். இதனால் பெரும்பாலான வைக்கோல் கட்டுகளில் தீ பற்றவில்லை. தீவிபத்திலிருந்து லாரி சேதமின்றி காப்பாற்றப்பட்டது.
சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தீயணைப்பு படையினர் நிலைய அதிகாரி சந்திரசேகரன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுபோன்ற சம்பவம் ராசிபுரம் பகுதியில் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.