

நாமக்கல்:
நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகளில் உள்ள 151 வார்டுகள், 19 பேரூராட்சிகளில் உள்ள 288 வார்டுகள் என மொத்தம் 439 வார்டுகளுக்கு நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 7 முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும், தலைமை தேர்தல் அலுவலர், வாக்குப் பதிவு அலுவலர் நிலை எண் 1, 2, 3 என மொத்தம் 3,328 பேர் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களில் தகுதியானவர்களுக்கு தபால் வாக்குச் செலுத்தி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 1,392 பேருக்கு தபால் வாக்குகள் செலுத்துவதற்கான படிவம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பூர்த்தி செய்து அதற்கான உறையில் வைத்து நன்கு ஒட்டி செலுத்த வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இறுதிக் கட்டப் பயிற்சி நடைபெறும் மையங்களில் தபால் வாக்குகளுக்கான பெட்டியில் பூர்த்தி செய்த படிவங்கள் அடங்கிய உறைகளை செலுத்தலாம்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22-ம் தேதி காலை 8 மணிக்குள் தபால் வாக்குகளைச் செலுத்திட வேண்டும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.