பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கைதானவாலிபர் மீது 25 வழக்குகள்

இரவு வீட்டின் போர்டிகோவில் சரண்யா செல்போன் பேசிக்கொண்டு இருந்தார். வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு முதுகில் குத்திவிட்டு ஓடிவிட்டார்.
பாண்டி என்கிற ராஜன்
பாண்டி என்கிற ராஜன்
Published on

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி செரமிட்டாம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விசைத்தறி அதிபர். இவரது மனைவி சரண்யா (வயது 36).

கடந்த 14-ந் தேதி இரவு வீட்டின் போர்டிகோவில் சரண்யா செல்போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் உள்ளே இருந்த மகன் ஷர்ஷித் (12) சத்தம் போட்டு உள்ளான்.

முகமூடி கொள்ளையன்

சத்தம் கேட்டு வீட்டிற்குள் சென்ற சரண்யாவை முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு முதுகில் குத்திவிட்டு ஓடிவிட்டார். இதையடுத்து காயம் அடைந்த சரண்யாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து சரண்யா, திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பிடிபட்டார்

இந்தநிலையில் திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குமாரமங்கலம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், நாமக்கல் மேட்டுப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த பாண்டி என்கிற ராஜன் (வயது 38) என்பதும் செரமிட்டாம் பாளையம்புதூர் பகுதியில் சரண்யாவிடம் 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதும் தெரியவந்தது.

25-க்கும் மேற்பட்ட வழக்குகள்

தொடர்ந்து அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. பாண்டி மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்துமே அடிதடி, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் ஆகும்.

இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com