மோகனூர் காகித ஆலை தீ விபத்தில் முதுநிலை மேலாளர் சாவு

மோகனூர் காகித ஆலை தீ விபத்தில் காயமடைந்த முதுநிலை மேலாளர் பரிதாபமாக இறந்தார்.
.
.
Published on

நாமக்கல்:

மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் பிளாண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த பிளாண்ட் மூலம் சர்க்கரை ஆலையில் அரவை பணி நடைபெறுகிறது.

கடந்த மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி அரவை பணி நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து பொங்கல் பண்டிகை முடிந்து கடந்த 22-ந் தேதி அரவை பணி தொடங்குவதற்காக காகித ஆலை பிளாண்டில் பாய்லர் பற்ற வைக்கப்பட்டது.

இந்த பணியில் முதுநிலை மேலாளர் மணிவண்ணன் (வயது 54), பிளாண்ட் என்ஜினீயர் ஜெகதீசன் (35), பணியாளர்கள் கோபால் (40), சதீஸ்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது பிளான்டில் இருந்து சரிவர நெருப்பு வராததால் பாய்லர் கதவை திறந்ததாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென நெருப்பு வெளியேறியது. இதில் அங்கு நின்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

பின்னர் அவர்கள் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் முதுநிலை மேலாளர் மணிவண்ணன் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவருடைய மகன் பிரனேஷ் (22) மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com