

பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து வார்டுகளிலும் மறுவரையறை செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் வேலூர் பேரூராட்சியின் 3வது வார்டு பகுதியில் இருந்த கோவில் காடு மற்றும் ராஜா நகர் பகுதியில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட வாக்குகளை ஒழுகூர்பட்டி 2-வது வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
ஒழுகூர் பட்டிக்கும் குப்புசிபளையம் கோவில் காடு மற்றும் ராஜாநகர் பகுதிக்கு இடையே சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு இருப்பதால் ஒழுகூர்பட்டிக்கு அருகில் உள்ள பகுதியை அந்த வார்டுடன் இணைத்து இதனை விடுவிக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு மனு கொடுத்து கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் மறுசீரமைப்பு முடிவுகளில் எவ்வித மாற்றமும் செய்யாத நிலையில் தற்போது பேரூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து கோவில் காடு மற்றும் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு மிக அருகில் உள்ள 5-வது வார்டுடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைத்து தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.
தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு பரமத்திவேலூர்-மோகனூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.