

நாமக்கல்:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் காவல் துறை சாா்பாக பல்வேறு இடங்களில் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி பகுதியில் திருச்செங்கோடு பொறுப்பு காவல் துணை கண்காணிப்பாளா் பழனிச்சாமி உத்தரவின்பேரில் மகளிா் காவல் ஆய்வாளா் ஹேமாவதி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காவலா்கள் கொடி அணிவகுப்பை நடத்தினா்.
கூட்டப்பள்ளி காலனி பேருந்து நிறுத்தத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் அணிவகுப்பு பேருந்து நிறுத்தத்தை அடைந்தது.
பொதுமக்கள் எந்தவிதமான அச்சமும் இன்றி தோ்தலை சந்திக்கவும் வாக்களிக்கவும் பாதுகாப்பாக இருப்போம் என்பதை வலியுறுத்தும் வகையிலும் இந்த அணிவகுப்பு நடைபெற்றது.