

ராசிபுரம்:
வெண்ணந்தூர் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுவை மறுகட்டமைப்பு செய்தல், திறம்பட செயல்படுத்துதல் என்ற நோக்கத்துடன், தலைமை ஆசிரியர், ஆசிரியர், உள்ளூர் பிரதிநிதி 2 பேர் மற்றும் தன்னார்வலர்கள் அமைப்பின் ஓய்வு பெற்ற அலுவலர் ஆகிய 5 உறுப்பினர்களுக்கான பயிற்சி நடந்தது.
இந்த பயிற்சி வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 6 இடங்களில் நடந்தது. முதல்கட்டமாக வெண்ணந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஓ.சவுதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 2-வது கட்டமாக வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ரா.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் நடந்தது.
பயிற்சியில் பள்ளி செயல்பாடுகளை பள்ளி அளவில் திட்டமிட்டு மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், குழந்தைகளின் உரிமைகள், கட்டாய கல்வி உரிமை சட்டம், பள்ளி மேலாண்மைக்குழுவை மேலாண்மை செய்தல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் தொடங்கி வைத்தார். இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள், கருத்தாளர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.