ஆத்தூர் யூனியன் அலுவலகத்தில் வாயில் கருப்புத்துணி கட்டி உறுப்பினர்கள் போராட்டம்

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் முற்றுகையிட்டனர். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தர்ராஜ். துணைத் தலைவராக இருப்பவர் வசந்தி மயில்வேல். ஊராட்சி மன்ற செயலராக இருப்பவர் பால்ராஜ். இந்த ஊராட்சியில் துணைத் தலைவர் உட்பட 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் மீது பல்வேறு முறையீடு புகார்கள் குறித்து கடந்த 4 ஆண்டுகளாக ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), மாவட்ட கலெக்டர், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யங்கோட்டை ஊராட்சி புதூரில் உள்ள திருமண மண்டபம் அருகே 200 அடி வரை மட்டும் ஆழ்துளை கிணறு அமைத்து விட்டு 600 அடி வரை ஆழ்துளைக்கிணறு அமைத்ததாக 15-வது நிதி குழு மானியம் நிதி ரூ.6 லட்சம் எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் எழுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் செல்வ மகாமுனி, சரண்யா, இளங்கோவன், முனிராஜ், பரந்தாமன், நாகஜோதி ஆகியோர் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாயில் கருப்பு துணி கட்டியபடி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com