

மதுரை
எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை சந்திப்பு ரெயில்நிலையம் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்தே பரபரப்பின்றி காணப்படுகிறது. மதுரை ரெயில்நிலையம் வழியாக தென் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி பல ஆயிரக்கணக்கானோர் ரெயில்கள் மூலம் வந்து செல்வது வழக்கம்.
குறிப்பாக முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளை போன்று முன்பதிவின்றி திடீர் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை மதுரை ரெயில் நிலையம் வழியாக அதிகளவில் நடந்து வந்தது. முன்பதிவில்லா பயணிகள் வருகை மூலம் ரெயில்வே துறைக்கும் அதிக வருவாய் கிடைத்து வந்தது.
இந்தநிலையில் கொரோனாவை காரணம் காட்டி ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்பட்டன. மேலும் ராமேசுவரம், செங்கோட்டைக்கு தினசரி 3 முறை இயக்கப்பட்ட ரெயில்களின் எண்ணிக்கை ஒன்றாக குறைக்கப்பட்டது. இதனால் பயணிகள் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். ரெயில்வே துறையின் வருமானமும் குறைந்தது.
மேலும் மதுரை ரெயில் நிலையத்தை நம்பி வாழ்வாதாரம் நடத்தி வரும் உரிமம்பெற்ற ரெயில்வே கூலி போர்ட்டர்களும் போதிய வருவாய் இன்றி பரிதவித்து வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு முன்பு போலவே அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகளை ரெயில்வே நிர்வாகம் இணைக்கவேண்டும், மதுரையில் இருந்து ராமேசுவரம் மற்றும் செங்கோட்டைக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில்களை உடனே இயக்க வேண்டும் என்ற கோரிக்கை ரெயில் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து தென் மாவட்ட எம்.பி.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்துள்ளனர்.