கூலித்தொழிலாளியை கொல்ல முயன்றவர் கைது

மதுரை அருகே தலையில் கல்லை போட்டு கூலித்தொழிலாளியை கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.ஆத்திரத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு விட்டதாக தெரிவித்தார்.
கூலித்தொழிலாளியை கொல்ல முயன்றவர் கைது
Published on

மதுரை

மதுரை ஒத்தக்கடை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் எதிரே, 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடுவதாக ராஜகம்பீரம் கிராம நிர்வாக அதிகாரி மகாலிங்கத்திற்கு தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து அவர் சம்பவ இடத்துக்கு வந்தார்.

அதன் பிறகு படுகாயம் அடைந்தவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் படுகாயம் அடைந்தவர், பொள்ளாச்சியை சேர்ந்த பழனி (வயது 45) என்பது தெரியவந்தது. இவர் மதுரை ஒத்தக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருக்கு கஞ்சா, மது பழக்கங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பழனியுடன் சுற்றித் திரிந்ததாக, வாலிபர் ஒருவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர் மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சதீஷ்குமார் கூறுகையில், "நான் மதுபானம் வாங்குவதற்காக பழனியிடம் பணம் கேட்டேன். அவர் தர மறுத்தார். எனவே ஆத்திரத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு விட்டு தப்பி சென்று விட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பழனியை கொல்ல முயன்றதாக சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com