பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் நிறுவன ஊழியர் கைது

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். நடு ரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசார் அஜ்மீர் காஜாவை கைது செய்தனர்.
கைதான அஜ்மீர் காஜா
கைதான அஜ்மீர் காஜா
Published on

மதுரை

மதுரையில் பிளஸ்-2 மாணவிக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் வந்தது. இதில் தொடர்பு உடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் தலைமையில், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி, வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

அந்த மாணவி போலீசாரிடம் கூறுகையில், "வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த அஜ்மீர் காஜா (வயது 36) என் பெரியம்மா மகளை திருமணம் செய்துள்ளார். அவர் கே.கே. நகரில் உள்ள ஆடிட்டர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நான் ஆன்லைனில் படித்தபோது அம்மாவின் செல்போன் மூலம் உறவினர் அஜ்மீர் காஜா உடன் பேசி வந்தேன்.

அதன் பிறகு வழக்கம்போல பள்ளிக்கூடத்துக்கு சென்று வர ஆரம்பித்தேன். நான் அவருடன் செல்போனில் பேசுவது இல்லை. 'என்னுடன் செல்போனில் பேச வேண்டும்' என்று அவர் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். சம்பவத்தன்று காலை கீழமாசி வீதியில் நடந்து சென்றேன். அங்கு வந்த அஜ்மீர் காஜா, கையை பிடித்து இழுத்து வம்பு செய்ததாக தெரிவித்து உள்ளார்.

போலீசார் அஜ்மீர் காஜாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பிளஸ்-2 மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மாணவிக்கு நடு ரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசார் அஜ்மீர் காஜாவை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com