

மதுரை
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் அடிப்படையில் ஒரு போலீஸ் நிலையத்துக்கு தலா 3 வீதம் ஒட்டு மொத்தமாக 380 ரோந்து குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. மதுரை மாநகரில் திருநகர், மாட்டுதாவணி, விராட்டிபத்து உள்பட 17 பகுதிகளில் சோதனை சாவடிகள் உள்ளன. அங்கு போலீசாரை இரவு 10 மணி முதல் விடிய விடிய கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் போலீஸார் 15 சோதனைச்சாவடிகள் மட்டுமின்றி 80 பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. இது தவிர 300 ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி அளவில் இரவு நேர ஊரடங்கு தொடங்கியது. அப்போது போலீசார் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் போக்குவரத்து வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத வகையில் தடுப்பு வேலிகளை ஏற்படுத்தி இருந்தனர்.
அடுத்தபடியாக போலீசார் முக்கிய வீதிகளில் ரோந்து சென்று ‘வணிக நிறுவனங்களை இரவு 9.30 மணிக்குள் மூட வேண்டும் என்று அறிவித்தபடி இருந்தனர். எனவே மதுரை மாவட்டத்தில் இரவு 10 மணிக்குள் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு விட்டன. இதன் காரணமாக மதுரை மாநகரில் முக்கிய சாலைகள் மற்றும் ஜன நெரிசல் மிகுந்த கடை வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
இரவு 10 மணிக்கு மேல் வரும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அலுவலக அடை யாள அட்டையை வாங்கி சரிபார்த்து அதன்பிறகு பத்திரமாக அனுப்பி வைத்தனர். மோட்டார் சைக்கிளில் தேவையின்றி சுற்றித்திரிந்த வாலிபர்களை மட்டும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மதுரையில் ஊரடங்கு முதல் நாள் என்பதால் போலீசார் வாகன ஓட்டிகளிடம் பெரிதாக கெடுபிடி காட்டவில்லை. மதுரையில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும் என்பதால், அதற்கு ‘தூங்காநகரம்‘ என்ற பெயர் உண்டு. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மதுரை மாநகரம் நேற்று இரவு 10 மணிக்கு பிறகு முழுவதுமாக தூங்கி வழிந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
மதுரை மாவட்டத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு கொரோனா இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வந்து உள்ளது இங்கு குறிப்பிடத்தக்க அம்சம். இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது முகக் கவசம் பணிய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி “பொதுமக்கள் முக கவசம் அணிந்து செல்கின்றனரா?’ என்பதை கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் மாநகர அளவில் 12 குழுக்களை அமைத்து உள்ளார். இவர்கள் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது முகக் கவசம் அணியாமல் செல்வோரிடம் ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகரில் நேற்று மட்டும் முகக் கவசம் அணியாமல் திரிந்த வர்களிடம் 86 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.