மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அறிவுரை

கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்விக்கு பெற்றோர் தடையாக இருக்கக்கூடாது என்று மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி கேட்டுக்கொண்டுள்ளார்.
விழிப்புணர்வு முகாமில் பங்கேற்றவர்கள்.
விழிப்புணர்வு முகாமில் பங்கேற்றவர்கள்.
Published on

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அம்மாபட்டி கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி,  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.  

டி.ஐ.ஜி.  பொன்னி பேசுகையில், சிறுமிகளின் கவனம் எந்தெந்த வகையில் திசை திருப்பப்படுகிறது? அவர்களுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள், பெண் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பொறுப்பு, குழந்தை திருமண தடைச்சட்டம் தொடர்பாக கருத்துக்களை கூறினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது கவனம் செலுத்துவதும், அவர்களுக்காக நேரம் ஒதுக்குவதும் தற்போதைய காலக்கட்டத்தில் அவசியமாகும். பெண் குழந்தைகளின் கல்வி மிக முக்கியம் என்பதை பெற்றோர் அறிந்து, அவர்களது கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து பெண் குழந்தைகள் பெற்றோருக்கு பாதபூஜை செய்தனர். அதன் பிறகு ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்‘ என்று கிராமமக்கள்  உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு முகாமில் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி, திருமங்கலம் டி.எஸ்.பி. சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com