சரக்கு வாகனத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பலி

மதுரையில் சரக்கு வாகனத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பலியானார். தந்தை கண் முன்பு நடந்த இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
சரக்கு வாகனத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பலி
Published on

மதுரை

மதுரை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகன் சஞ்சய் பாண்டி (வயது 15). இவர் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் சஞ்சய் பாண்டி சம்பவத்தன்று மாலை தந்தை பாண்டியராஜனுடன், மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அவர்களின் வாகனம், மதுரை அழகர்கோவில் ரோட்டில் சென்றது.

அப்போது திருவிளான்பட்டி பெட்ரோல் பங்க் அருகே, பின்னால் வேகமாக வந்த சரக்குலாரி மோதியது. இதில் தந்தை-மகன் ஆகிய 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது சரக்குலா ரியின் பின்புற கொக்கியில், எதிர்பாராத விதமாக மாணவனின் சட்டை சிக்கிக்கொண்டது. இதனால் அந்த லாரி, சஞ்சய் பாண்டியை தரதரவென இழுத்துச்சென்றது.

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன், 'என் பிள்ளையை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என்று கூக்குரலிட்டு கதறினார்.

இதனை கண்ட பொதுமக்கள் அவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் சட்டை முழுவதுமாக கிழிந்து, சஞ்சய் பாண்டி ரத்த வெள்ளத்துடன் நடுரோட்டில் கிடந்தார். இதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தந்தை-மகனை மீட்டு, கள்ளந்திரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் பாண்டியரா ஜனுக்கு சிறிய அளவில் காயம் இருந்ததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் சஞ்சய் பாண்டிக்கு உடல் முழுவதும் படுகாயங்கள் இருந்தன. அவரை உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இருந்தபோதிலும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே, சஞ்சய் பாண்டி பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனின் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com