

மதுரை
மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றுபவர் சந்தியா (வயது 24). இவர் நேற்றுமாலை தனது காரில் விளக்குத்தூண் பகுதிக்கு வந்தார். அங்கு ஒரு ஓட்டல் முன்பாக காரை நிறுத்திவிட்டு, பொருட்கள் வாங்க கடைகளுக்கு சென்றார்.
சந்தியா ஷாப்பிங் முடித்து விட்டு காருக்கு வந்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதனைப்பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். காருக்குள் வைத்திருந்த 4 செல்போன்களும் திருட்டு போயிருந்தது.
இது குறித்து விளக்குத்தூண் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் சந்தியா புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டியூர் சவுராஷ்டிராபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்(32). இவர் நேற்று மாலை காரில் காமராஜபுரம் பகுதி கடையின் முன்பாக காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். இந்தநிலையில் மர்ம வாலிபர் ஒருவர் காரில் இருந்த லேப்டாப்பை திருட முயன்றார்.
இதனை கவனித்துவிட்ட தினேஷ், திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். இதையடுத்து பொதுமக்கள் திரண்டுவந்து அந்த வாலிபரை பிடித்து விளக்குத்தூண் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சேவலூரை சேர்ந்த ரங்கராஜ் மகன் அசோக்குமார்(19) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.